சென்னை: கணவர் தியாகு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்ததைத் தொடர்ந்து கவிஞர் தாமரை தனது 8 நாள் தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை நேற்று இரவு 9 மணிக்கு தியாகு, கவிஞர் தாமரையுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அறிக்கை ஒன்றினை அளித்தார். ஆனால், வேறு எதுவும் பேசவில்லை. தியாகு எழுதியிருந்த கடிதத்தில், கவிஞர் தாமரை அவர்களுக்கு… ஓவியர் வீர.சந்தானம், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு 3/3 இலும் இன்று காலையும் எழுதிய மடல்களின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். நீங்கள் கோரியிருந்தபடி, நடுநிலையான விசாரணைக் குழு அமைக்கும் பொறுப்பை ஓவியரும் வழக்கறிஞரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சென்ற நவம்பர் 23 ஆம் நாள் நான் வீட்டை விட்டு வெளியேறியதற்கு அடிப்படையாகவும் உடனடியாகவும் அழுத்தமான காரணங்கள் இருப்பினும் (காண்க: 28/11 மின்ம அஞ்சல்) அந்த வெளிநகர்வினாலும் அடுத்து வந்த கிட்டத்தட்ட மூன்று மாத காலப் பிரிவினாலும், அனைத்துக்கும் உச்சமாக, கடந்த 7 நாள் தர்ணாப் போராட்டத்தாலும் உங்களுக்கும் சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடன் துன்பத்துக்காகவும்ன் மன வேதனைக்காகவும் உளமார வருந்துகிறேன். நான் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருப்பதை ஏற்று உங்கள் போராட்டத்தைக் கைவிட்டு இல்லம் திரும்ப வேண்டுகிறேன். அன்புடன் தியாகு
- என்று அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.



