விருதுநகரில் காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற இளைஞர் ஓட்டப்போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருதுநகரில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் சிறைக்காவலர்கள், இரண்டாம் நிலைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 3000-க்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மற்றும் மதுரை காவல்துறை துணைத் தலைவர் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்தத் தேர்வில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு போன்ற சோதனைகள் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்டம் மீசலூர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர் ஓட்டப் போட்டியில் ஓடிக்கொண்டிருந்தபோது மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.
பதற்றமடைந்த சக இளைஞர்கள் அவரை தூக்கி முதலுதவி கொடுத்து உள்ளனர். எனினும் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து வந்த விருதுநகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் மாரிமுத்து உயிரிழந்ததன் காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்