
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தங்களது மகனை, கடத்திச்சென்று துன்புறுத்தும் மருமகள் வீட்டார் மீது நடவடிக்கை கோரி ஈரோடு மாவட்ட எஸ்.பி-யிடம், பெற்றோர் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று பவானி லோகநாதன் ஹாஸ்பிடல் ரோடு பகுதியை சேர்ந்த யோகவேலு – இந்திராணி தம்பதியினர் வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், தங்களது மகன் நரேஷ் கிருஷ்ணாவுக்கு, வேலூரை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்ததாகவும், பின்னர் மருமகள் நடத்தை சரியில்லாததாலும், கருத்து வேறுபாடு காரணமாகவும் கணவன் – மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்
மேலும், நீதிமன்றத்தில் விவாக ரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு முடிவெட்டும் கடைக்கு சென்ற நரேஷ் கிருஷ்ணாவை, மருமகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அடியாட்கள் தாக்கி, வேலூருக்கு கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ள அவர்கள், இதுகுறித்து தங்களது புகாரின் பேரில் கோபி போலீசார், மருமகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு நரேஷ் கிருஷ்ணாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்க கூறியும், அவர்கள் ஒப்படைக்க வில்லை என்று கூறி உள்ளனர்.
மேலும், மருமகள் குடும்பத்தினர் தங்களது மகனை அடித்து சித்திரவதை செய்து பல லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், தங்களையும் வேலூருக்கு வரும்படி மிரட்டுவதாகவும், அவ்வாறு சென்றால் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.
எனவே போலீசார் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்தும், கடத்தப்பட்ட மகனை உயிருடன் மீட்டுத்தரவும் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.