October 21, 2021, 6:34 am
More

  ARTICLE - SECTIONS

  திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாசார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல்!

  அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால் நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார் என்றார்.

  samayapuram
  samayapuram

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தின் மூலம், 29 ஓதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை கடந்த வாரம் முதல்வர் சுடாலின் வழங்கினார். அதை அடுத்து, சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோவில்களில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த சட்ட மசோதா திமுக., முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டு, வழக்குகள் காரணமாக நிறைவேற்ற முடியாமல் இருந்தது. 51 ஆண்டுகளுக்குப் பின் இது நிறைவேற்றப் பட்டுள்ளதாக முதல்வர் சுடாலின் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

  அதே நேரம் கோவில்களில் ஏற்கெனவே அர்ச்சகர்களாக இருந்தவர்கள் திடீரென வெளியேற்றப் பட்டதால், பாரம்பரிய சிவாச்சார்யர்கள், அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  நேற்று காலை இது போல் சில நிகழ்வுகள் நடந்ததாகக் குறிப்பிட்டு, அர்ச்சகர்கள் சிலர் வருத்தப் பட்டும், அரற்றியும் பேசும் ஆடியோக்கள் வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகின. அவற்றைக் கேட்டு பலரும் தங்கள் வருத்தங்களையும் அரசுக்கு சாபம் அளித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

  திருச்சி மலைக்கோட்டை, சமயபுரம், தஞ்சை, பெரம்பலுார் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் கோயிலில் ஓதுவார், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், இந்தக் கோவில்களில் ஏற்கெனவே பணிபுரிந்த அர்ச்சகர்களிடம் இருந்து, சாவி உள்ளிட்ட பொறுப்புகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு, அவர்களுக்கு எழுத்து மூலம் எந்த பதில்களும் தராமல், வாய்மொழி உத்தரவில் ஆலய ஈ.ஓ.,க்கள் மூலம் புதியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக சமூகத் தளங்களில் தகவல்கள் பரவின.

  திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், வயலுார் முருகன் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில்களில் புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக தங்கள் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி, அதிர்ச்சியுடன் கண்ணீர் விட்டுக் கதறும் ஆடியோக்கள் பரவின. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் என்பவர் கணேஷ்குமார் என்பவருடன் பேசும் ஆடியோவில், ‘மலைக்கோட்டை கோவில், நாகநாதர் கோவில்களில், இன்று காலையே புதிய பணியாளர்கள் வந்து பணியில் சேர்ந்து விட்டனர். நாகநாதர் கோவிலில் காலை சந்தி முடிந்தவுடன், சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு, அவாளுக்கு ‘டூட்டி’ போட்டு விட்டனர். ‘வயலூர் சுப்பிரமணியர் கோவிலிலும், ஐந்து குருக்களை வெளியே அனுப்பி விட்டனர். பிராமணர் அல்லாதவரை பணியமர்த்தி விட்டனர். சமயபுரத்திலும் மூலவர், ஆதிமாரியம்மன், பரிவார மூர்த்தி சந்நிதிகளிலும், குருக்களை வெளியேற்றி விட்டு, ஜே.சி., வந்து அவாளை பணியமர்த்தி விட்டார். ‘வயலூரில், இன்று காலையில், இ.ஓ.,வே வந்து, சிதம்பரம், கார்த்தி போன்றவர்களை உள்ளே வரக் கூடாது எனக் கூறி வெளியே அனுப்பியிருக்கின்றனர்’ என்கிறார். அதில், போன் செய்தவர் கதறி அழும் குரல், இந்த ஆடியோவை சமூகத் தளங்களில் கேட்போரை அதிகம் மனதளவில் பாதித்திருக்கிறது.

  அது போல், விருதுநகர் மாவட்டம் சாத்துார் வேங்கடாசலபதி கோவிலில் ரெங்கநாத பட்டர் (67) பணிபுரிந்து வந்த நிலையில், இக்கோவிலுக்கு புதியவராக, விளாத்திகுளம் புதூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பணியில் சேர வந்தபோது, ரெங்கநாதன் பட்டர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி அரசு வழங்கிய உத்தரவைக் காட்டியுள்ளார். எனினும் எழுத்து மூலம் அவருக்கு எதுவும் அளிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசாரும் வந்து மிரட்டிய நிலையில், ரெங்கநாத பட்டர் குடும்பத்தார் அங்கிருந்து வேதனையுடன் வெளியேறியுள்ளனர்.

  சாத்தூர் பெருமாள் கோயில் பட்டாச்சார் பெண்ணின் கண்ணீர்!

  அக்கோவிலுக்கு புதிதாக நியமிக்கப் பட்ட புதிய பட்டர் சீனிவாசன் கூறுகையில், ‘புதூரில் உள்ள பெருமாள் கோவிலில் 10 ஆண்டுகள் பூஜை செய்துள்ளேன். வைதிக முறைப்படி பூஜைகள் செய்ய பயிற்சி பெற்றுள்ளேன் என்றார்.

  இந்நிலையில் இப்பிரச்னைகுறித்து, திமுக., தலைவர்/தமிழக திமுக., முதலமைச்சர் சுடாலினுக்கு பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

  இந்த விவகாரம் குறித்து அவர் அளித்த பேட்டியில்…
  திமு.க., தலைவர் ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் முதல்வராகி இருக்கிறார். திக., ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார்.

  subramaniam swami
  subramaniam swami

  சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என்று சொன்னதும் ஸ்டாலின் பின்வாங்கினார்.

  திடீரென திக., சொன்னதைக் கேட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார். இதை திக., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். ’51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்’ என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர்.

  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்குதான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிகத் தெளிவாக இருக்கும் போது தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்.

  முதல்வர் என்பதால் அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இப்படித்தான் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில் நடராஜர் கோவிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது பல நூற்றாண்டுகளாக தீட்சிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அதுபோல் இப்போதும் அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது.

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால் ஏற்கெனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி முதல் கட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன்.

  தேவையானால் உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே இந்த உத்தரவை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

  அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல் ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால் நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார் என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,571FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-