
நாளை ஆட்டோக்கள் இயங்கும் என்று இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநிலத் தலைவர் மணலி த. மனோகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
நாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ள பந்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கும் போல் ஆட்டோக்கள் இயக்கப்படும்..
உலகமே சீன வைரஸ் தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளதை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளோம். இப்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் தேவையற்ற பந்த் அறிவிப்பது, தமிழகத்தில் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் கம்யூனிஸ்ட்கள் அச்சுறுத்தலில் இருங்குவது கண்டிக்கத்தக்கது.
கம்யூனிஸ்ட் கொடுத்துள்ள கோரிக்கைகள் எதுவும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இவை அனைத்தும் கம்யூனிஸ்ட்களின் அரசியல். இதனை கடுமையாக எதிர்க்கிறோம். தொழிலாளர்களை அச்சுறுத்தும் இதுபோன்ற போக்கை காவல்துறை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இக்கட்டான நிலையும் சீரடைவதற்கு மத்திய அரசு அனைவருக்கும் இலவசமாக கொடுத்த தடுப்பூசியே காரணம். தடுப்பூசி பற்றி மக்களிடையே தவறான கருத்தினை பரப்பி, குழப்பிய சமூக விரோதிகளால் தான் சீரடைவதற்கு சில மாதங்கள் தாமதமாயின என்பதை ஊடகங்களும், மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த தவறான பிரச்சாரத்தை, கருத்தை வெளியிட்டவர்கள் யார்? இதே கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் தானே? நிலைமை சீரடைந்து வரும் நிலையில் பந்த் அறிவித்து அரசியல் செய்ய நினைக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி, இதற்கு துணைபோகிறது கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள்.
கொரானா ஊரடங்கின் போது நமது சங்கம் கலெக்டரிடம் நிவாரணம் வழங்க கோரி மனு கொடுத்தது. அப்போது இந்த கம்யூனிஸ்ட் சங்கங்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஓடிகொண்டிருக்கும் ஆட்டோவை நிறுத்தித்தான் நிவாரணம் கேட்க வேண்டும் என்பது கம்யூனிஸ்ட்களின் கீழ்த்தரமான செயல்பாடு. தற்போது பண்டிகை காலம் நெருங்கி வரும் காலத்தில் மக்களை சிரமப்படுத்துவதே இதன் நோக்கம் என்று சந்தேகிக்கிறோம்.
எனவே, 27.9.2021 அன்று அறிவித்துள்ள பாரத் பந்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கம் போல் எங்களது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோக்கள் இயங்கும். இதற்கு தக்க பாதுகாப்பும், ஒத்துழைப்பும் காவல்துறையும், தமிழக அரசும் வழங்கும் என நம்புகிறோம்… என்று தெரிவித்துள்ளார்.