புதிய தலைமைச் செயலக வழக்கு: நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு தடை

Published:

tamilnadu-secretariatசென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முந்தைய திமுக ஆட்சியின் போது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப் பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அது குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் நீதிபதி ரகுபதி ஆய்வு நடத்தினார். இந்த ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்றபோது, இவ்வழக்கு முடியும் வரை புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக விசாரணை எதையும் ஆணையம் மேற்கொள்ளாது என்று நீதிபதி ரகுபதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் உறுதி அளித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீண்டகாலம் நிலுவையில் உள்ளது, அதற்காக புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான விசாரணையை நிறுத்தி வைக்க முடியாது, மீண்டும் விசாரணையை மீண்டும் தொடங்கப் போவதாக நீதிபதி ரகுபதி தெரிவித்தார். இதனால், ஒரு கேள்விப் பட்டியல் தயாரித்து அவற்றுக்கு பதில் அளிக்குமாறு கருணாநிதிக்கு கடந்த பிப். 17-ம் தேதி அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி வியாழக் கிழமை நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் சார்பில் அளித்த உறுதிமொழியை மீறி விசாரணை நடவடிக்கை தொடங்கப் பட்டுள்ளது. விசாரணை பாரபட்சமாகவும், உள்நோக்கத்துடனும் நடப்பதால் இந்த கமிஷனின் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம், புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ரகுபதி ஆணைய விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். கருணாநிதியின் மனுவுக்கு நீதிபதி ரகுபதி ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img