
உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய துறையில் முதலீடு செய்து வரும் நிலையில் கூகுள் தனது பழைய கசப்பான அனுபவத்தின் காரணமாகப் புதிய திட்டத்தில் பெரிய அளவிலான முதலீட்டையும், விரிவாக்கத்தைச் செய்ய மனம் இல்லாமல் உள்ளது.
ஆனால் இதேவேளையில் தற்போது கூகுள் தற்போது இருக்கும் சேவையில் மிகப்பெரிய அளவிலான மேம்பாட்டைச் செய்யவும், புதிய முறை தேடல் சேவையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழரான சுந்தர் பிச்சை தலைமையில் இயங்கும் கூகுள் நிறுவனம் தற்போது இண்டர்நெட் உலகில் இருக்கும் மிக முக்கியப் பிரச்சனையாக விளங்கம் சைபர் அட்டாக் பிரச்சனையைத் தீர்க்கவும், இந்தச் சைபர் அட்டாக் பாதிப்பில் இருந்து தனது நிறுவனத்தையும், நிறுவன சேவைகளையும், சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
கடந்த 2 வருடத்தில் குறிப்பாகக் கொரோனா தொற்று, லாக்டவுன் பாதிப்பு ஏற்பட்ட காலகட்டத்தில் உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்களின் தரவுகள் திருடப்பட்டது, இதில் பல முன்னணி இந்திய நிறுவனங்களும் உள்ளது. இந்தச் சைபர் அட்டாக் நிறுவன தளத்தில் மட்டும் அல்லாமல் தனிநபர் தளத்திலும் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்ற திட்டத்தில் தீவிரமாக இறங்கிய கூகுள், இஸ்ரேல் நாட்டின் முன்னணி சைபர்செக்யூரிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனமான Siemplify-ஐ சுமார் 500 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.

தற்போது கூகுள் கைப்பற்றியுள்ள இஸ்ரேல் நாட்டின் Siemplify நிறுவனத்தைக் கூகுள் கிளவுட் பிளார்ட்பாரம் பிரிவில் Chronicle operation உடன் இணைக்க உள்ளது. இஸ்ரேல் நாட்டின் Siemplify நிறுவனம் என்ட் டு என்ட் செக்யூரிட்டி சர்வீசஸ்-ஐ நிறுவனங்களுக்கு அளிப்பதில் திறன் வாய்ந்த நிறுவனமாக விளங்குகிறது.
Siemplify நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இருதரப்பு நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் நன்மை உண்டு எனக் கூகுள் நிறுவனத்தின் கிளவுட் செக்யூரிட்டி பிரிவின் பொது மேலாளர் மற்றும் கூகுள் துணைத் தலைவரான சுனில் பொட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் கூகுள் அடுத்த 5 வருடத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் சுமார் 10 பில்லியின் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் பல நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை வைத்துள்ளது கம்யூட்டர் டெக்னாலஜி மட்டும் அல்லாமல் ஆயுத தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறது.