
திரிபுராவில் ஆசிரியராக இருக்கும் சுமன், உலகிலேயே தனக்கு மிகப் பிடித்த நபருக்கு ஒரு பரிசு தர விருப்பப்பட்டார்
யாருமே தந்துவிடாத பரிசாக இருக்க வேண்டும் என அவர் செய்தது தற்போது வைரலாகி இருக்கிறது.
நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி தனக்குப் பிடித்தவருக்கு பரிசளித்து இருக்கிறார் சுமன் தீப்நாத். அந்த அதிர்ஷ்டசாலி நபர், அவரேதான்.
தனக்குத்தானே காதலர் தினத்துக்கு பரிசளித்துக் கொண்ட சுமன் பாலிவுட் நட்சத்திரங்களைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.
“நிலாவில் பாலிவுட் ஸ்டார்கள் நிலம் வாங்கியுள்ளதைக் கேள்விப்பட்டபோது அதன் விலை மிக அதிகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் தேடி பார்த்தால் வாங்க முடிந்ததாக தான் இருந்தது” என்கிறார் சுமன்.
அப்படி சுமன் வாங்கிய நிலத்தின் விலை ரூ.6000/- மட்டும்தான். ஷிப்பிங் மட்டும் டெலிவரி கட்டணங்கள் சேர்த்தே அவ்வளவு தானாம். இன்டர்நேஷனல் லூனார் சொசைட்டி இதற்கான விற்பனையைச் செய்திருப்பதாக சுமன் தெரிவிக்கிறார்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷாருக் கான் உள்ளிட்டோர்களுக்கு நிலவில் நிலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. “நிலவில் நிலத்தின் விலை பூமியை விட மலிவாக இருக்கிறது.
இப்போதைக்கு நிலவில் வீடு கட்டி குடியேறும் எண்ணம் எதுவுமில்லை. ஆனால் நிலவுக்கே போனது போல மகிழ்ச்சியாக இருக்கிறது” என வானத்துக்கும் பூமிக்கும் சந்தோஷத்தில் குதிக்கும் சுமன் அடிப்படையில் கணித ஆசிரியராம். ‘நிலாவுக்கு மிக அருகில்…’ விளம்பரங்களை இனி எதிர்பார்க்கலாம் போல.
நிலவில் இடம் வாங்குவது எந்தளவிற்கு நம்பகமானது என்கிற விவாதம் இன்னும் இருக்கிறது. “புது வகையிலான காலனிய போட்டி”யைத் தவிர்க்கும் பொருட்டு இந்தியா உட்பட 109 நாடுகள் கையெழுத்திட்ட விண்வெளி உடன்படிக்கையின்படி சட்டபூர்வமாக நிலாவில் யாரும் நிலம் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.