மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை கபாலீசுவரர் கோவில் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சமும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து புனித தீர்த்தம் வரவழைக்கப்பட்டு வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகஅமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியுள்ளார் .
அவர் கூறியதாவது:-
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்களுக்கு பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சிவ பக்தர்களுக்கு ஆன்மீக தொடர்பான சொற் பொழிவுகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம் போன்ற பக்தி சார்ந்த நிகழ்ச்சிகள் 1.3.2022 மாலை 6 மணி முதல் 2.3.2022 காலை 6 மணி வரை நடத்திட ஒரே நேரத்தில் சுமார் 3000 நபர்கள் அமர்ந்து கண்டுகளிக்கின்ற வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற பக்தர்களுக்கு குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து பஞ்சாமிர்தம், தினைமாவு, மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து நெய்தோசை, அப்பம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து லட்டு, அப்பம், நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து வடைமாலை உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
கபாலீசுவரர் கோவில் சார்பாகவும், உபயதாரர்கள் சார்பாகவும், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவாசகத்தின் முக்கிய பகுதியான சிவபுராணம் பாராயணம் ஓதுவார்கள் முழுக்க அதை பக்தர்கள் சொல்லுகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்





