Dhinasari Home page

உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்கள மீட்பதில் தனிக் கவனம் செலுத்திட தமிழ் முதல்வர் வெளியுறவு அமைச்சர் க்கு கடிதம்…

சற்றுமுன்

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வருவதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,  உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்டு அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைக்க, பிரத்யேகமாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கைமீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தமிழக அரசு தொடர்பில் உள்ளதாகவும், இதுவரை, 2,223 மாணவர்களை விரைவாக அங்கிருந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, அவர்களின் விவரங்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் பகிரப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளையில், இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 193 மாணவர்கள் மட்டுமே தாய்நாடு திரும்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர், உக்ரைனிலிருந்து அழைத்துவரப்படும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்திட வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.  

ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியாவிற்கு 1,000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து வந்து இந்தியாவிற்குத் திரும்பக் காத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அந்த மாணவர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் திரும்புவதை உறுதி செய்திட ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை, நான்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் மேற்படி நாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்குத் தேவையான அனுமதிகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் விரைவாக வழங்கிட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.  

இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து மாணவர்களையும் பிரதமர் தலைமையில் உலக நாடுகளே வியக்கும்படி, தாயகம் மீட்கும் நடவடிக்கையை, மத்திய அரசின் மீட்புக்குழு சிறப்பாக செயல்படுத்தும் இந்த சிக்கலான வேளையில் தமிழகம் ஒரு தூதுக்குழுவை அனுப்ப என்ன தேவை?. 

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி என்று பல உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்கமுடியாமல் திகைத்து நிற்கும் வேளையில், தூதரக ராஜதந்திரத்தின் மூலம் போர்க்களத்தில் இருந்து நாட்டு மக்களை மீட்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.