உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் இந்தியா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவர். அதனால், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என உக்ரைனுக்கு சென்று தமிழ் மாணவர்களை மீட்க செல்லவிருந்த தமிழகஎம்.பி.,க்களிடம், மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். இந்நிலையில் அவர்களை மீட்க, மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அறிவிப்புஇதற்கிடையே, உக்ரைனில் மருத்துவம் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை மீட்க, எம்.பி.,க்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பப் போவதாக தமிழக அரசு அறிவித்தது.
தி.மு.க., எம்.பி.,க்கள் சிவா, அப்துல்லா, கலாநிதி உள்ளிட்ட குழுவினர், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற, டில்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினர்.கூடுதல் விமானங்களை ஈடுபடுத்தி, இந்தியர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்பட்டுவிடுவர் என அவர் தமிழக எம்.பி க்களிடம் உறுதியளித்தார். இந்திய வெளியுறவு துறை தமிழக எம்.பி க்கள் உக்ரைன் செல்ல முறைப்படி அனுமதிதரவில்லை.
இந்நிலையில் தமிழக முதல்வருடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்.பி க்கள் கூறினர்.
இந்தநிலையில் மத்திய மந்திரி எல்.முருகன், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது,
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதையும் சேர்ந்த மாணவர்களையும், பொது மக்களையும் மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தினமும் 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை தாய் நாட்டுக்கு வந்து சொந்த மாநிலம், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே செய்து வருகிறது.
ஆனால் இந்த நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நோக்கம் மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வருவதுதான். அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அதன்படி செயல்பட்டு வருகிறது.அங்குள்ள கடைசி மாணவரை மீட்டு அழைத்து வரும் வரை மீட்புப்பணி தொடரும்.
மத்திய அரசு மிக தீவிரமாக மீட்புப்பணிகளை செய்து வரும் போது மாநில அரசு தனியாக குழுவை அமைத்துள்ளது நிலையில் அவர்கள் எத்தனை பேரை அழைத்து வந்துள்ளார்கள்? நீட் தேர்வு காரணமாகத்தான் மாணவர்கள் அதிகளவில் உக்ரைனுக்கு சென்று படித்து வருவதாக கூறுவதும் தவறு.
ஏனெனில் எல்லா படிப்புகளுக்கும், வேலைகளுக்கும் கூட தகுதி தேர்வு என்று ஒன்று இருக்கும். அதில் தகுதியும் பெற வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்த பிறகு அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்பவர்கள் எத்தனை பேர்? என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.என கூறினார்.





