மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன், இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியையும் மார்ச் 21 ல் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
இந்தநிலையில் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் இன்று நடந்த 2ம் நாள் விசாரணையில், ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக சசிகிலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அப்போலோ மருத்துவரிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்.
அப்போது அப்பல்லோ டாக்டர் மதன்குமார், ஜெயலலிதாவுக்கு 2016ம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை ஏற்பட்டது கார்டியாக் அரஸ்ட் தான் எனவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றினோம் என தெரிவித்துள்ளார்.
நேற்று மார்ச் 7 முதல்நாள் விசாரணையில், அப்போலோ டாக்டர் பாபு மனோகர், ‛ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு நாளுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தலைச்சுற்றல், மயக்கம் இருந்தது. துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் நிலவியது. சில நாட்கள் ஓய்வெடுக்க பரிந்துரைத்தாலும், அவர் மறுத்துவிட்டார்’ என வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





