TN 20220319142339781765 1 - 2026

திருவரங்கத்தில் நடந்த பங்குனி திருவிழா..இன்று இரவு ஆளும்பல்லக்கு சேவையுடன் நிறைவு-

சற்றுமுன்

108வைணவஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க
பக்திபரவசத்துடன்  நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து அரங்கனை தரிசனம் செய்தனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 13-ந்தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். 17-ந்தேதி நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, பங்குனி தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார்.
பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திரமண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்திற்கு பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணிமுதல் நேற்று அதிகாலை 3 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் காலை 9.30 மணிவரை உற்சவர்கள் நம்பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 11.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். காலை 11.45 மணிக்கு நம்பெருமாள் சேர்த்தி மண்டபத்தில் இருந்து கோரதம் என்னும் பங்குனிதேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். பகல் 12 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 12.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழசித்திரைவீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரைவீதிகளில் வலம் வந்து மீண்டும் மாலை  மணியளவில் நிலையை அடைந்தது.
ஆளும் பல்லக்கு
பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர். இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

TN 20220319142339781765 1 - 2026
images 1 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.