images 22 3 - 2026

ஊட்டி நெல்லை தென்காசி மாவட்ட வனப்பகுதியில் பரவலாக மழை..!

Featured சற்றுமுன்

தென்மாவட்டங்களில் காற்றழுத்த மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் ஊட்டி நெல்லை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது.

ஊட்டியில்  நேற்று காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் கன மழை பெய்த நிலையில் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இதனால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி  மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாத துவக்கம் வரை மழை பொழிவு இருந்தது. அதன்பின்,  காலநிலைநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைப்பனி பொழிவு, பகல் நேரங்களில்  வெயிலான காலநிலை நிலவி வந்தது. உறைப்பனி காரணமாக நீலகிரி  மாவட்டத்தில் செடி கொடிகள் காய்ந்து கருகி பசுமை இழந்து காட்சியளிக்கின்றன.  தேயிலை மகசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெயிலால் நீர்நிலைகள்  வறண்டதால் காய்கறி விவசாய பணிகளும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி  உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, கடந்த 2   நாட்களாக வெயிலின்றி மந்தமான காலநிலை நிலவியது. நேற்று முன்தினம்  கோத்தகிரி, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில், நேற்று காலை  முதல் மழையின்றி காட்சியளித்தது. அதன்பின், மதியம் 12 மணியளவில் ஊட்டி  நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

மழை காரணமாக,  குளிர்ச்சியான காலநிலை நிலவியது. திடீர் மழையால் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட  இடங்களில் இருந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். சிலர் மழையில்  நனைந்தபடியே சுற்றி பார்த்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சிறிது நேரம் மிதி  படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழையால் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டம் முழுவதும் மேலும் சில  நாட்கள் பரவலாக மழை பெய்யும் பட்சத்தில் வனத்தீ ஏற்படும் அபாயம் நீங்கும்  என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறு மலைப்பகுதியில் 24 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தென்காசி மாட்ட வன பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி அருகே உள்ள கன்னடியன் கால்வாய் பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், மணிமுத்தாறு மலைப்பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும், அம்பை, பாபநாசம் பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. வி.கே. புதூர், கடையம் பகுதியிலும் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது.

மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து தொடங்கியுள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 132 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 72.65 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 82 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 95.70 அடியாக உள்ளது.

நேற்று இரவு ஆழ்வார்குறிச்சி பகுதியில் கோடை மழை காரணமாக வீசிய கடுமையான சூறாவளி காற்றில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்கி, ஜூன்- ஜூலை மாதம் நன்றாக மழை பெய்யும். இந்த காலகட்டத்தில் குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டும். குற்றால சீசனும் இந்த மாதங்களில் பிரமாதமாக இருக்கும்.

ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. மே, ஜூன் மாதங்களில் மழை நன்றாக பெய்தது. அதன் பிறகு படிப்படியாக மழை குறைந்து விட்டது.

அதுபோல இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

images 22 3 - 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.