இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் கடல்வழி தமிழகத்துக்கு வரத்துவங்கியுள்ளனர்.
இலங்கையில் அரிசி, பருப்பு, காய்கறி, பால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஒரு கோப்பை தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. அரிசி கிலோ ரூ. 450க்கும் பால் லிட்டர் ரூ. 75க்கும் விற்பனை ஆகிறது. வடை ஒன்று ரூ.80க்கும் ஒரு முட்டையின் விலை 32 முதல் 36 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொருட்களை வாங்க இயலாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கி உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக இலங்கை உலக நாடுகளின் உதவியை நாடி வருகின்றது. இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.7500 கோடி கடன் உதவி வழங்கும் என்று பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விலைவாசி உயர்வை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை மக்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர்.இந்தியா – இலங்கை இடையே 13 மணல் திட்டு உள்ள பகுதியில் கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அடுத்த 3ம் மணல் திட்டில் ஒரு ஆண், 2 பெண்கள் கைக்குழந்தை உட்பட 6 பேர் நிற்பதாக க்யூ பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, 3வது மணல் திட்டு பகுதிக்கு சென்ற அதிகாரிகள், அங்கு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் நின்று இருப்பதை கண்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இலங்கையின் தலைமன்னார் பகுதியில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் படகு மூலம் வந்தது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக ராமேஸ்வரம், மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி. மெரைன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .
இலங்கையில் பொருளாதார நெருக்கடி எதிரொலியால் இந்தியாவுக்கு வருபவர்களை கண்காணிக்க நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கடல் பரப்பில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து ரோவர் கிராப்ட் படகு மூலம் கடலோரக் காவல் படையினர் இன்றுமுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


