images 71 1 - 2026

மே.வங்கத்தில் 8பேர் கொலை..பிரதமர் கடும் கண்டனம் :

சற்றுமுன்

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்ட
வன்முறைக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். 
இதனையடுத்து, இவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் உள்ள போக்டுய் கிராமத்தில் வன்முறை வெடித்தது. 
ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அம்மாநிலத்தை ஆளும் மம்தா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  

இந்த வன்முறைக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்து பிரதமர் மோடி பேசினார். 

அப்போது, பீர்பூம் வன்முறைக்கு தமது இரங்கலைத் தெரிவிப்பதாகவும்,  குற்றவாளிகளை கைது செய்ய  மாநிலத்திற்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என தாம் உறுதியளிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாகவும், இது போன்ற குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களும் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

பீர்பூம் வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், பெண்களும் குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்படுவதை விட ஜனநாயகத்தில் வேதனை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை என கூறினார்.இந்த விவகாரத்தில் இனி நான் எதுவும் பேச மாட்டேன். பிரதமர் பேசியதை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். சமீபகால வரலாற்றில் இதுபோன்ற படுகொலைகளை நாம் யாரும் பார்த்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே,பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

images 71 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.