மேற்கு வங்கத்தில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வன்முறை நிகழ்ந்த கிராமத்திற்கு இன்று சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

மேற்கு வங்கத்தில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று தர வேண்டும். அவர்கள் தப்பி செல்வதற்கு எந்த காரணமும் கூறக்கூடாது என போலீசாருக்கு மம்தா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில், ஊராட்சி துணைத்தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதில், ஒரு வீட்டில் இருந்த 8 பேர் பரிதாபமாக கருகி உயிர் இழந்தனர். சம்பவத்தில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கோல்கட்டா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.
இதனிடையே, வன்முறை நிகழ்ந்த கிராமத்திற்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் மத்தியில் மம்தா பேசியதாவது, மேற்கு வங்கத்தில் காட்டுமிராண்டிதனமான செயல் நடக்கும் என நம்பவில்லை. தாய்மார்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உங்களது குடும்ப உயிரிழந்திருக்கின்றனர். எனது மனமும் நொறுங்கி உள்ளது. வன்முறையில் சதி உள்ளது. சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.
அருகிலிருந்த உயர் அதிகாரியை வரவழைத்த மம்தா, குற்றவாளிகள் தப்பித்து செல்ல எந்த காரணமும் கூறக்கூடாது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். தவறு செய்யும் போலீசார் தண்டிக்கப்படுவார்கள். சாட்சிகள் மீது எந்த தாக்குதலும் நடக்காமல் இருக்க அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறிய அவர், சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களிடம் ரூ. 2 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையையும் வழங்கினார். பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மம்தா அறிவித்துள்ளார்.





