தமிழக பட்ஜெட் மார்ச் 25ல் தாக்கல்: ஒரு மாதம் நடைபெறும் கூட்டத் தொடர்!

Published:

TN-assembly சென்னை: தமிழக அரசின் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 25ஆம் தேதி தாக்கலாகிறது. 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதுகுறித்து சட்டசபை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் அறிவிக்கை வெளியிட்டுள்ளார், அதில், ‘‘மார்ச் 25-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2015-16-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 25-ந் தேதி அவைக்கு அளிக்க வேண்டும் என்றும் 2015-16-ம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 28-ந் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் கவர்னர் நாள் குறித்துள்ளார். 2014-2015-ம் ஆண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை 28-ந் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் கவர்னர் நாள் குறித்துள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, 25-ந் தேதி தமிழக பட்ஜெட்டை நிதித் துறையத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் 2015-2016-ம் ஆண்டுக்கான வரவு-செலவு, புதிய திட்டங்கள், வரி மாற்றங்கள், சலுகைகள் அறிவிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன், அன்றைய கூட்டம் முடிந்துவிடும். மரபுப்படி அடுத்தநாள் விடுமுறை. மீண்டும் 27-ந் தேதி சட்டசபை கூடும். அன்று ஆளுங்கட்சி தரப்பில் பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படும். இந்த தீர்மானத்தின் மீது அனைத்துகட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். சில தினங்கள் நடக்கும் இந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். பின்பு ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கையை அந்தந்த அமைச்சர்கள் தாக்கல் செய்து நிறைவேற்றியவுடன், அந்தந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஏறத்தாழ ஒரு மாத காலம் நடக்கும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று, சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் சபாநாயகர் தலைமையில் நடக்கும் சட்டசபையின் அனைத்துகட்சி தலைவர்களின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்படும். அப்போது எத்தனை நாட்கள் இந்த கூட்டம் நடக்கும், எந்தெந்த நாளில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்று முடிவெடுக்கப்படும். அடுத்த வருடம் அதாவது, 2016-ல் தமிழகத்தில் நடைபெறுகிறது. எனவே இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img