தமிழகத்தில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வுக்காக குறைத்து அறிவிக்கப்பட்ட பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் 10,பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 5 முதல் 31ம்தேதி வரை நடத்தப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்தது. பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட காலதாமதத்தால் பாடஅளவு கணிசமாக குறைக்கப்பட்டது. அதன்படி 10ம் வகுப்புக்கு 39 சதவீதம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 35 சதவீதம்என்ற விகிதத்தில் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கல்வித்துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு இன்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
2021-22ம் கல்வியாண்டுக்கான குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அந்த பாடங்கள் அடிப்படையிலேயே பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கப்படும்.
எனவே, எஸ்சிஇஆர்டி வழங்கியுள்ள அனைத்து பாடங்களையும் விரைந்து முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்கள் பள்ளிகளின் பார்வைக்காக தற்போது மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
