Tamil News large 3000450 - 2026

நிலக்கரி தட்டுப்பாடு..தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு:

சற்றுமுன்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரே நேரத்தில் 4 யூனிட்களில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்
தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

காற்று காலம் மற்றும் மழைக் காலங்களில் மின்தேவை குறையும் போது தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள அலகுகளில் சில இயக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் கடுமையாக அடித்து வருவதால் மின்தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனல்மின் நிலையத்தின் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பல்வேறு காரணங்களால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு போதிய நிலக்கரி வராமல் இருந்தது.

எனவே கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து 5 யூனிட்டுகளும் தினமும் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 மற்றும் 3-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு மேலும் அதிகரித்த காரணத்தால் இன்று காலை முதல் 4 மற்றும் 5-வது யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரே நேரத்தில் 4 யூனிட்களில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, கையிருப்பில் உள்ள நிலக்கரியை கொண்டு தான் கடந்த சில நாட்களாக அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி செய்து வந்தோம். தற்போது பெருமளவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு யூனிட்டை மட்டுமே இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் நிலக்கரி வரும் என கூறப்பட்டுள்ளது. எனவே அது வந்த பின்னர் தான் வழக்கம் போல 5 யூனிட்டுகளில் மின்உற்பத்தி செய்யப்படும் என்றனர்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தற்போது 1-வது அலகில் மட்டுமே மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதன்மூலம் 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
கோடை காலத்தையொட்டி தற்போது மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரேநேரத்தில் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tamil News large 3000450 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.