பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று துவங்கியது இன்றும் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
கார்த்திகை மண்டபத்தில் நடந்த இந்த பணிக்கு பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார், திருப்பூர் வாழைத்தோட்டம் அய்யன்கோவில் உதவி ஆணையர் மேனகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இந்த பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரத்து 310 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 111 செலுத்தப்பட்டிருந்தது.
இதைத்தவிர தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, கைவிலங்கு, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 1,039 கிராம், வெள்ளி 15 கிலோ (15,083 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, 2-வது நாளாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.





