நெல்லை அருகே அரசு பள்ளியில் நடந்த மோதலில் காயம் அடைந்த மாணவர் இன்று மரணம் அடைந்த நிலையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மோதலில் +2 மாணவர் இறந்த விவகாரத்தில் +1 மாணவர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (48), விவசாயி. இவரது மனைவி உச்சிமாகாளி (42).
இவர்களுக்கு செல்வ சூர்யா (17) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். செல்வ சூர்யா அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 25ந்தேதி செல்வ சூர்யா வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே சாதி வாரியாக கலர் கயிறு கட்டுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும், செல்வ சூர்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் 2 பேருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. உடனே அந்த 2 மாணவர்களின் நண்பர்களும் சேர்ந்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.
அப்போது எதிர் தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் அங்கு கிடந்த கற்களால் செல்வ சூர்யாவை தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் அங்கு ஓடி வந்து இரண்டு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.
இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை வர வழைத்து அவர்களிடம் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவதானு, கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இதற்கிடையே மாணவன் செல்வ சூர்யாவுக்கு இரவில் வீட்டில் வைத்து பயங்கர தலைவலி ஏற்பட்டு உள்ளது. உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவரது தலையில் ரத்தம் உறைந்து இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.
மறுநாள் செல்வ சூர்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை செல்வ சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே கோஷ்டி மோதல் தொடர்பாக போலீசார் 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் தற்போது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளக்கால் பொதுக்குடி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சைபுதீன், பவுசில்சமீர், சுடலைமணி மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக பாப்பாக்குடி, பள்ளக்கால் புதுக்குடி, இடைகால் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






