அசானி புயல் காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த அசானி தீவிர புயலானது, புயலாக வலுவிழந்தது. நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அசானி புயல் இன்று ஆந்திர கடலோர மாவட்டங்களை தக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திராவின் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
அசானி புயல் காரணமாக நேற்று சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 17விமானங்கள் ரத்து செய்யப்பட்டது பயணிகள் வர்த்தகர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது.





