காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று வைகாசிபெருந்தோரோட்ட திருவிழா விமர்சையாக துவங்கி நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வைகா சித்திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.
தற்போது நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதையடுத்து கட்டுப்பா டுகள் தளர்த்தப்பட்டு இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கருட வாகன சேவை கடந்த 15ந் தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிகளில் பவனி வருகிறார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.






