திருநெல்வேலி தென்காசி குமரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதாலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குற்றாலம் பாபநாசம் பகுதியில் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளா தமிழக மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் அதிக அளவு கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மட்டுமே மழை பெய்து வந்த நிலையில் நேற்று தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.
இதேபோல் கடனாநதி, கருப்பாநதி,
குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 37 அடியாக உள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 30 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 46. 50 அடியாகவும் உள்ளது.
நெல்லை தென்காசி குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணை பகுதிகளில் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50.50 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 55 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2666 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக 2 கன அடி நீர் மட்டுமே மணிமுத்தாறு அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 229 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை வரை 63.78 அடியாக இருந்த நிலையில் இன்று 7 அடி உயர்ந்து 70.73 அடியாக உள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







