
கொல்கத்தாவை சேர்ந்த கைவினைஞர் தயாரித்த காளி சிலை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குமரர்துலியில் பல்வேறு பூஜைகளுக்கான சுவாமி சிலைகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.
காளி , துர்கா முதல் ஜகதாத்ரி வரை அனைத்து சிலைகளும் குமரர்துலியில் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குமர்துலி கைவினைஞர் கௌசிக் கோஷ் என்பவரால் செய்யப்பட்ட காளி சிலை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவதற்கு முன்பாக காளி சிலை உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட உள்ளது.
இது குறித்து கைவினைஞர் கௌசிக் கோஷ் கூறுகையில், இதற்கு முன் தான் மத்திய லண்டனில் உள்ள கேம்டன் பூஜோ கமிட்டியின் துர்கா சிலையை தயாரித்ததாகவும் , அதனை கண்ட அங்கிருந்த அலுவலர் மூலம் பிரிட்டிஷ் அருங்காட்சியக அலுவலர்கள் தன்னை தொடர்பு கொண்டு காளி சிலை தயாரிக்க கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.