குஜராத்தில் இன்று நடைபெற்ற ‘குஜராத் கவுரவ் அபியான்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். பிரதமர் மோடிக்கு சிக்கலி பகுதியில் பாரம்பரிய முறைப்படி, பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நவ்சாரியில் நடைபெற்ற ‘குஜராத் கவுரவ் அபியான்’ என்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ3,050 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது,”கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சி குஜராத்தின் பெருமை. ஏழைகளின் நலன் மற்றும் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதில் எங்கள் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாக கொண்டு அரசாங்கம் செயல்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான முழுமையான அணுகுமுறையை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சிகிச்சை வசதிகளை நவீனப்படுத்த முயற்சித்துள்ளோம், மேலும் சிறந்த ஊட்டச்சத்து, சுத்தமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம்” என கூறினார்.
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளதோடு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் குஜராத் தேர்தலில் களம் காண உள்ளது.
இதனையொட்டி ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை பாஜக மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளையும் முடக்கிவிட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவிய குஜராத் மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட உள்ளது. இதனால் சொந்த மாநிலமாக குஜராத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக குஜராத் மாநிலத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு சிக்கலி பகுதியில் பாரம்பரிய முறைப்படி, பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.