சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டிராவல்ஸ் வாகனம் மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவரும் பரிதாபமாக இன்று உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொரு காவலர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது .
ராசிபுரம் அருகே சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அணைப்பாளையம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. வாகனப் போக்குவரத்து வசதிக்காக அப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக திருநெல்வேலியில் இருந்து ஒசூர் நோக்கிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் மற்றும் ராசிபுரம் காவல் நிலைய காவலர் தேவராஜன் மற்றும் புதுச்சத்திரம் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர், பழனி, காவலர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நோக்கி அதிவேகமாக சென்ற டிராவல்ஸ் வேன் விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவலர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராசிபுரம் காவலர் தேவராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர், மணிகண்டன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும், மருத்துவமனை செல்லும் வழியில் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டிராவல்ஸ் வேனில் பயணித்த மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது .உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கவும் முதல் – அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
