இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கடந்த 25வது நாளாக மாற்றமில்லை என்றாலும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) பெட்ரோல்-டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாட்டின் சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) கடந்த சில நாட்களாக விற்பனை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல் – டீசலுக்கு 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் விற்பனை நிலையங்களில் தாமதம், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை நடந்து வருகின்றன. இது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வினியோக தடைகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்து உள்ளது.
விவசாய நடவடிக்கைகள், மொத்தமாக வாங்குபவர்கள் தங்கள் கொள்முதலை பெட்ரோல் பம்புகளுக்கு மாற்றியது மற்றும் தனியார் விற்பனை நிறுவனங்களில் வாங்குவோர் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொள்முதலை மாற்றியது போன்றவை காரணமாக இந்த தேவை அதிகரிப்பு நிகழ்ந்து உள்ளது.எனினும் நாட்டின் பெட்ரோல் – டீசல் உற்பத்தியானது தேவையை விட அதிக அளவுக்கு உள்ளது. இதன் மூலம் எத்தகைய திடீர் தேவை அதிகரிப்பையும் சமாளிக்க முடியும்.
அதேநேரம் தற்போதைய திடீர் தேவை அதிகரிப்பு காரணமாக சில தற்காலிக தொழில்நுட்ப பிரச்சினைகளை உள்ளூர் மட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





