மதுரை நகைப்பட்டறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை நகைப்பட்டறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 11 கிலோ திமிங்கல எச்சம் திமிங்கல எச்சம் (அம்பர்கிரிஸ்) என்பது விலை உயர்ந்த பொருள் ஆகும். ஆனால், இதனை பதுக்குவது சட்டவிரோதம். இந்த திமிங்கல எச்சமானது உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிப்புக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் திமிங்கல எச்சத்துக்கு அதிக கிராக்கி நிலவுவது குறிப்பிடத்தக்கது. கடலில் அரிதாக கிடைக்கும் இதனை கடத்தல்காரர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து கோடிக்கணக்கில் பணத்தை கைமாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் ஒரு நகைக்கடை பட்டறையில், திமிங்கலத்தின் எச்சம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனஉயிரின பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனே அதிகாரி மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அந்த பட்டறைக்குள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 11 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சத்தை கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
பட்டறையில் இருந்த மதுரை மஞ்சணகார தெருவை சேர்ந்த ராஜாராம் (வயது 36), வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி (36), சிவகங்கை மாவட்டம் கீரனூரை சேர்ந்த கவி (48) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் கவிதான் அதனை கொண்டு வந்து கொடுத்தது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.
திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே சுரக்கும் அம்பர்கிரிஸ் எனும் திரவம் உருண்டையாக வடிவெடுத்து, அதன் எச்சமாக மிதந்து அலைகளால் கரைக்கு அடித்து வருவதாக கூறப்படுகிறது. அதனை நெருப்பினால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். இதற்காக கடலில் திமிங்கலத்தை சிலர் வேட்டையாடுவதால், அம்பர்கிரிஸ் தடை செய்யப்பட்ட அரிய வகை பொருளாக கருதப்படுகிறது. இந்த திமிங்கல எச்சம் கவிக்கு எப்படி கிடைத்தது, அதனை நகைப்பட்டறையில் பதுக்கியது ஏன்?் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
