
வீரன் அழகுமுத்துக் கோன் குருபூஜையில் முதல்வர் அரசு மரியாதை செய்ய வேண்டும் என்று யாதவ மகாசபை மாநில செயற்குழுக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
யாதவ மகாசபை தலைவர் மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தலைவர்டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அவர்களின் தலமையில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் அரங்கில்இன்று(26.06.2022), யாதவ மகாசபை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திட வலியுறுத்துவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் தி.தேவநாதன் யாதவ், ஜாதி பெயர் படித்து வாங்கிய பட்டமா என சிலர் கேள்வியெழுப்புவதாக கூறினார்.
ஜாதி என்பது இறைவனும் பெற்றோரும் கொடுத்த பட்டம் என்றும் அதனை அனைவரும் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்தி அனைவருக்கும் சமமான அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தினார்.
செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளான குணசீலன் யாதவ், சுப்ரமணியன், மரிய சுந்தரம், சுந்தர், திருவள்ளூர் சீனிவாசன், தேவராஜ் மற்றும் வழக்கறிஞர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
- 2022 ஜூலை11ல் சென்னை எழும்பூரில் நடைபெறும் முதல் சுதந்திரப் போராட்ட மாவீரன் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவில் தமிழக அரசு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவீரன் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என இச்செயற்குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- முதல் சுதந்திரப் போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையை கட்டாளங்குளத்தில் அமைதியான முறையில் சிறப்பாக நடத்த காவல்துறை அனுமதிக்க கோருகிறோம்.
- 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவில் இடம் பிடித்த மாணவர்களை பாராட்டுவதோடு, நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் முகாம் நடத்தப்படும்.
- யாதவ மகா சபை சார்பாக மாவட்டம் தோறும் மணமாலை நிகழ்ச்சி நடத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு இச்செயற்குழு ஒப்புதல் அளிக்கிறது.
- யாதவ மகா சபை தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கால்நடை வாரியம் அமைத்து, அதில் யாதவர் ஒருவரை தலைவராக நியமிக்க இச்செயற்குழு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
- தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் யாதவர் ஒருவரை உறுப்பினராக நியமனம் செய்ய இம்மாநில செயற்குழு கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.
- ஆடு வளர்ப்போருக்கு மானிய விலையில் வலை, கம்பி, தார்பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்க மாநில அரசு முன்வர வேண்டும்.
- பெரும்பான்மையான தனித்தொகுதிகளில் யாதவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு அத்தனி தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக அறிவிக்க இச்செயற்குழு வலியுறுத்துகிறது. (உதாரணமாக சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிபுத்தூர், பரமக்குடி, மானாமதுரை, பெரம்பலூர், துறையூர், திட்டக்குடி ,திருத்தறைப்பூண்டி, சீர்காழி, கீழ்வேலூர், வானூர், திண்டிவனம், செங்கம், வந்தவாசி, ஊத்தங்கரை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், எழும்பூர், பொன்னேரி)
- சாதி, மதமற்றவர்கள் என்று அரசிடம் சான்றிதழ் பெறுபவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்கிறார்கள். இது மதமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே அனைத்து சமுதாய தலைவர்கள் தங்கள் சமுதாயத்தை சார்ந்தவர்களிடம் இக்கருத்தை எடுத்துச் சென்று மதமாற்றத்தை தடுக்கவேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
- சாதிவாரியான கணக்கெடுப்பை உடனடியாக எடுத்து அனைத்து சாதிக்குமான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கவேண்டும் எனவும் கணக்கெடுப்பு இல்லாமல் எந்த ஜாதிக்கும் இடஒதுக்கீடு வழங்க கூடாது எனவும் இச்செயற்குழு அரசை வலியுறுத்துகிறது.