வரும் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரு தரப்பினரும் மாறி மாறி பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனால் சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மிகுந்த கவனமுடன் செயலாற்றி வருகிறார்கள். இதை தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு விசாலமான இட வசதியுடன் பொதுக்குழு கூட்டத்துக்கு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதற்கு காவல்துறையில் உரிய அனுமதியும் பெறப்பட்டுள்ளது.