கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஆற்றிங்கல் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் மணிக்குட்டன், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது அத்தை ஆகியோர் இறந்து கிடந்தனர்.
மணிக்குட்டன் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மற்ற நால்வரும் விஷம் குடித்துள்ளனர்.
கடன் தொல்லையால் மணிக்கூட்டன் மன உளைச்சலில் இருந்ததாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது வீட்டிற்கு அருகில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் சமீபத்தில் சொந்த வீடு ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவகத்தை ஆய்வுசெய்து மணிக்கூட்டனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதைத் தொடர்ந்து உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சனிக்கிழமை தனது உணவகத்தைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணிக்குட்டன் செய்த நிலையில், இன்று காலை தனது வீட்டிற்கு வந்த உணவக ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைக் கண்டு அதிர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் 5 பேரின் சடலங்களையும் மீட்டு, மேலும் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனியில் கேரளா தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை-:
பழனியில் தனியார் தங்கும் விடுதியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன் – சத்தியபாமா தம்பதியர், அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாகக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த தனியார் விடுதி முன்பு கேரள தம்பதியினரின் உறவினர்கள் அழுது கொண்டே வந்தனர். அப்போது விடுதியில் வேலை செய்பவர் என்ன நடந்தது என்று கேட்டபோது, எங்கள் உறவினர்கள் விடுதியின் முன்பக்கம் புகைப்படம் எடுத்து பழனியில் இந்த விடுதியில் தங்கி இருப்பதாகவும், தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் எங்களுக்கு தொலைபேசியில் தகவலை அனுப்பி வைத்தனர் என்று கூறினர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அறை உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரோத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.; இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.