கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108திவ்ய தேசங்களில் ஒன்றான மலைநாட்டு திருப்பதி கமில் முக்கியமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 29-ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று கும்ப கலசத்தில் வராகு தானியங்கள் நிறைக்கும் பணி நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிராசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம் உபதேவன்களுக்கு பிரதிஷ்டை, பஞ்சவாத்தியம், நாதஸ்வர மேளம் முழங்க காலை 5.10 முதல் 5.50-க்குள்ளா நேரத்தில் பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம், காலை 6.00 முதல் 6.50 வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கோவிலில் ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது புஜங்க சயனத்தில், யோக முத்திரையில் மேற்கு நோக்கிப் பள்ளிகொண்டிருக்கிறார் ஆதிகேசவ பெருமாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் ஆகிய திருத்தலங்களுக்கு முந்தைய பழைமையான கோயில் திருவட்டாறு. திருவட்டாறில் 22 அடி நீளத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கு, ஆதிகேசவர் எனப் பெயர் வந்ததற்கு புராண கால கதை ஒன்று சொல்லப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தினரின் குல தெய்வமாக விளங்கிய இந்த கோயில் 108 திவ்ய தேசங்களில் 76வது கோயிலாகும். 13 மலையாள நாட்டுத் திருத்தலங்களில் ஒன்று. திருவட்டாறு கோயிலுக்கு பிறகுதான் திரேதாயுகத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்தது. கலியுகம் தொடங்கி 950 ம் ஆண்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அமைக்கப்பட்டது.
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட பழைமையான கோயில்.இந்தத் திருத்தலத்தை வட்டமாகச் சுற்றி பரளியாறும், கோதையாறும் செல்வதால் திருவட்டாறு என்று இந்தத் தலத்திற்கு பெயர் வந்ததாம். பரளியாறும், கோதையாறும் திருவட்டாறைச் சுற்றி வந்து மூவாற்று முகத்தில் சங்கமம் ஆகிறது. ஆற்றுத் தண்ணீர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலை அடித்துச் சென்றுவிடக்கூடாது என்று பூமா தேவி இந்த கோயில் நிலத்தை மட்டும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தினாராம்.
படைப்புக்கடவுளான பிரம்மா யாகம் செய்ய நினைத்து அதை மகாவிஷ்ணுவிடம் கூறினார். யாகம் செய்தால் அது தீய விளைவை ஏற்படுத்தும் என்று உணர்ந்த மகாவிஷ்ணு அதை தடுக்க நினைத்தார். யாகம் நடத்த வேண்டாம் என்று கூறியும் மகாவிஷ்ணுவின் பேச்சை மீறி முனிவர்களை அழைத்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. யாக குண்டத்தில் நெருப்பு மூட்டப்பட்டுவிட்டது.அப்போது வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை அழைத்த மகா விஷ்ணு, பிரம்மா உச்சரிக்கும் மந்திரத்தை மாற்றி யாகத்தை நிறுத்து என்று உத்தரவிட்டார். பிரம்மாவின் நாக்கை பிறழச் செய்து மந்திரத்தை மாற்றி உச்சரிக்கும்படி செய்தார் சரஸ்வதி தேவி. மந்திரம் தவறாகக் கூறப்பட்டதால் எரிந்துகொண்டிருந்த அக்னி குண்டம் புகை மண்டலமாக மாறியது. அதிலிருந்து கேசன், கேசி என்ற அசுரர்கள் தோன்றினர்.
அசுரர்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போனது. சிவ பக்தர்களான அவர்களை அமைதியாக இருக்கும்படி பிரம்மா வேண்டினார். யாகசாலையில் அட்டகாசத்தை நிறுத்த வேண்டும் என்றால் சாகா வரம் வேண்டும் என்று கேசனும், கேசியும் கேட்டனர். அவர்கள் கேட்ட வரத்தை கொடுத்தார் பிரம்மா. மகேந்திரகிரி மலையில் குகைக்குள் சென்று இருந்த கேசன் அடிக்கடி தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தார்.
தேவர்களால் அந்த அசுரனை எதிர்கொள்ள முடியாததால் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு கேசனுக்கு எதிராக ஏழு ஆண்டுகள் யுத்தம் செய்தும் அழிக்க முடியவில்லை. கேசன் பெற்ற சாகாவரம் அவனை காத்தது. இறுதியில் விஸ்வரூபம் எடுத்தார் மஹாவிஷ்ணு. விஸ்வரூபத்தைப் பார்த்து கேசன் மயங்கி விழுந்தான். தான் பள்ளிகொள்ளும் பாம்பணையான ஆதிசேஷனிடம், கேசனைக் கட்டும்படி கூறினார் மகாவிஷ்ணு. மயங்கிக்கிடந்த கேசனை ஆதிசேஷன் பாம்பு சுற்றிக் கட்டியது. சற்றும் தாமதியாமல் ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டுவிட்டார்.
மயக்கம் தெளிந்த கேசன் பன்னிரண்டு கைகளை வெளியே நீட்டித் தொல்லைகள் செய்தான். சிவ பக்தனான கேசனின் கைகளில் 12 சிவ லிங்கங்களைக் கொடுத்தார் மஹாவிஷ்ணு. இதனால் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தைக் கூறியபடி பெருமாளின் கீழே அடங்கிக் கிடக்கிறார் கேசன் என்கிறது புராண கதை. சாகாவரம் பெற்று அட்டகாசம் செய்த கேசனை அடக்கிய திருத்தலம் திருவட்டாறு என்றும். கேசனை அடக்கிய பெருமாளுக்கு ‘ஆதி கேசவன்’ எனப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் என்பதால் கருவறையில் சூரிய, சந்திரர்கள் இருக்கிறார்கள். திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கேசனை அடக்கி உக்கிர சம்ஹார மூர்த்தியாக பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். உக்கிர மூர்த்திகள் ஒரே இடத்தில் சேரமாட்டார்கள் என்பதால் இந்தக் கோயில் சுற்றுச் சுவருக்கு வெளியே நரசிம்மர் கோயில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது