

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை இன்று காலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி( 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இதனிடையே, கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தனது.
அதேவேளை, மாணவியின் மரணம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். காலை 6.50 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுகொண்டனர். ஸ்ரீமதியின் தாயார் கையெழுத்துப்போட்டு தனது மகளின் உடலை பெற்றுக்கொண்டார். மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து ஸ்ரீமதியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கொண்டு செல்லப்பட்டுகிறது. முன்னதாக, மருத்துவமனையில் இருந்த ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.