கன மழையை பொருட்படுத்தாமல் மலையில் குவிந்த பக்தர்கள்..


தமிழகத்தின் பிரசித்திபெற்ற மலைவாசல் சிவஸ்தலமான சதுரகிரி மலையில் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது.
திருவிழாவிற்காக ஜூலை 25 ஆம் தேதி முதல் மலைப்பாதை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் மலைக்கு சென்று வந்தனர். முதல் நாள் சிவராத்திரி வழிபாடு, பிரதோஷம் உள்ளிட்டவைகளை கடந்து இன்று முக்கிய நிகழ்வான அமாவாசை திருவிழா விமர்சையாக நடந்தது. அதிகாலை சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதற்காக மதுரை விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மலை அடிவாரமான தாணிப்பாறை வரை சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இரவு முதல் குவிந்த பக்தர்கள் அதிகாலை 5 மணிக்கு மலையேற அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் கனமழை காரணமாக பக்தர்கள் ஏழு மணிக்கு பிறகு மலை ஏற இன்று அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் கோரக்கர் குகை, அத்தியூத்து ஏற்றம், சங்கிலிப் பாறை ஆகிய இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் அந்த இடங்களை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தும் கூட மலைப்பாதையில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதனால் பக்தர்களிடையே ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அடிவாரப் பகுதியில் விருதுநகர் மாவட்ட போலீசார் 1,800 பேரும் மலைப்பகுதியில் மதுரை மாவட்ட போலீசார் 800 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
