சென்னை: தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை கோமாளி என அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்து பேசினார். இதனால், கொதித்தெழுந்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் அவையின் துணைத் தலைவர். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியபோது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததாகக் கூறினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் திமுக உறுப்பினர் அன்பழகன். மேலும் அவர், பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், முழக்கமிட்டபடி இருந்தார். இதை அடுத்து, திமுக உறுப்பினர் அன்பழகன் கோமாளி போல் செயல்படுகிறார் என்று கூறினார் பொள்ளாச்சி ஜெயராமன். அவரின் இந்தக் கருத்தால் மிகவும் ஆத்திரம் அடைந்த திமுக உறுப்பினர்கள், இந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். அப்போது, கோமாளி என்ற வார்த்தை நீக்கத்தக்க வார்த்தைப் பட்டியலில் இல்லை என அவைத்தலைவர் தனபால் விளக்கம் அளித்தார். அவரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த திமுகவினர், அவைத்தலைவர் தனபாலின் இருக்கை அருகே விரைந்தனர். இதனால், திமுகவினரை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பி.தனபால் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
எங்கள் உறுப்பினரை கோமாளி என்பதா?: பேரவையில் கொதித்தெழுந்த திமுகவினர் வெளியேற்றம்
Popular Categories