
குற்றாலம் சாரல் திருவிழா அமர்க்களமாக நடந்து வரும் நிலையிவில் படகு போட்டி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் குற்றாலத்தில் நிகழ்ந்து வரும் குற்றாலம் சாரல் திருவிழாவில் படகு போட்டி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் தினமும் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள படகு குழாமில் படகு போட்டி நடைபெற்றது. இதில் 4 இருக்கைகள், 2 இருக்கைகள் கொண்ட படகு போட்டி நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆர்வம் இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த போட்டியில் கலந்து கொண்டு, இலக்கை எட்டினர். நான்கு இருக்கைகள் கொண்ட படகு போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை குற்றாலத்தை சேர்ந்த அருண், பழனி, செந்தில், மூர்த்தி ஆகியோரும், 2-வது இடத்தை குற்றாலத்தை சேர்ந்த இசக்கி ராஜ், முத்துராஜ், சுப்புராஜ், வசந்த் ஆகியோரும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் முதல் இடத்தை சாம்பவர் வடகரையை சேர்ந்த செய்யது அலி பாத்திமா, சரயா, மூக்கம்மாள், முருக லட்சுமி ஆகியோரும், 2-வது இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த சவுரியா பிச்சை பிரியா, சீனு, ஷெர்லின், வினோ ஆகியோருக்கு பிடித்தனர். பரிசுகள் இரண்டு இருக்கைகள் கொண்ட படகு போட்டி ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை குற்றாலத்தைச் சேர்ந்த சுப்புராஜ், சந்தோஷ் ஆகியோரும், 2-வது இடத்தை முத்துராஜ், இசக்கி ராஜ் ஆகியோரும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் குற்றாலத்தில் 2 நாட்களில் ரூ.7 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் குற்றாலத்தில் சாரல் திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவுடன் இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் இணைந்து பராசக்தி கல்லூரியில் புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது. இதை காணவரும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. புத்தகத் திருவிழாவில் ரூ.1000-க்கு புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பனை கொடுத்து மேலும் ரூ.1000-க்கு புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதே போன்று இங்கு வரும் அனைவருக்கும் கூப்பன்கள் கொடுக்கப்பட்டு குலுக்கல் முறையில் அதில் ஒருவருக்கு ரூ.1,000-க்கு புத்தகங்கள் வாங்குவதற்கு கூப்பன்களும் கொடுக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் ரூ.7 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நேற்றும் மாணவ-மாணவிகள் புத்தக திருவிழாவை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனா்.
குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு தூறிக் கொண்டே இருந்தது. வெயில் இல்லை. குளுமையான சூழல் நிலவியது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதுது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துச் சென்ற நிலையில் இன்று அதிகாலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் அருவிகளில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.சுற்றுலாபயணிகள் இன்று விடுமுறை தினத்தில் மிக அதிகளவில் குற்றாலம் வருகை தந்தனர்.ஆனால் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.






