காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயாரால் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட குளிர் பானத்தை பருகிய பள்ளி மாணவர் உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்கத் தவறியதாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மீது பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்கால் நேரு நகர் வீட்டு வசதி வாரிய குடிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (48) – மாலதி (40) தம்பதியருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜேந்திரன் காரைக்காலில் ரேஷன் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியரின் இரண்டாவது மகன் பால மணிகண்டன் (13) நேரு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முதன்மையான மாணவனாக இருந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி ஆண்டு விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2-ம் தேதி பள்ளியில் நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்று மதியம் வீடு திரும்பிய மாணவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் விசாரித்ததில், உறவினர் கொடுத்தனுப்பியதாக பள்ளிக் காவலாளி கொடுத்த குளிர்பானத்தை பருகியதிலிருந்து தனக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மாணவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகாக அனுமதித்துவிட்டு, பள்ளிக்குச் சென்று இது குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, பால மணிகண்டனுடன் படிக்கும் சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா (46), பால மணிகண்டனின் உறவினர் கொடுத்ததாகக் கூறி பள்ளிக் காவலாளி தேவதாஸிடம் குளிர்பானம் வழங்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவரின் பெற்றோர் சகாயராணி விக்டோரியா மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரிய வந்த நிலையில் நேற்று இரவு சகாயராணி விக்டோரியாவை கைது செய்தனர்.
பால மணிகண்டனுக்கும், சக மாணவி அருள் மேரிக்கும் வகுப்பில் போட்டியிருந்ததாகவும், இதனால் பால மணிகண்டன் மீது அருள் மேரியின் தாய் சகாயராணி விக்டோரியா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்ததாகவும், நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சியில் பால மணிகண்டன் பங்கேற்கக் கூடாது என்பதற்காக சகாயராணி விக்டோரியா விஷம் கலந்த குளிர் பானத்தை வழங்கியுள்ளதாகவும் பால மணிகண்டனின் பெற்றோர் குற்றம் சாட்டார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 11 மணியளவில் பால மணிகண்டன் உயிரிழந்தார். இதையடுத்து உரிய சிகிச்சை அளிக்கத் தவறியதாலேயே மாணவன் உயிரிழந்ததாக் கூறி மருத்துவமனையைக் கண்டித்தும், என்ன விஷம் கொடுக்கப்பட்டது என போலீஸார் உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறியும், சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் நேற்று இரவும், இன்று காலையும் மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் கண்ணாடி, குடிநீர் இயந்திரங்கள் உள்ளிட்ட சில பொருட்களை சேதப்படுத்தினர். மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவம் காரணமாக மருத்துவமனை உள்ள பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாணவரின் உறவினர்கள், பொதுமக்கள் கூறியது: “அரசு பொது மருத்துவமனையில் மாணவருக்கு உரிய முறையான சிகிச்சை அளிக்கவில்லை. கொடுக்கப்பட்ட விஷம் குறித்து போலீஸாரும் குற்றவாளியிடம் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை. சனிக்கிழமை இரவு வரை நல்ல முறையில் மாணவர் பேசிக் கொண்டிருந்தார். அதுவரையிலும் சாதாரண வார்டிலேயே மாணவரை வைத்திருந்தனர். 10 மணியளவில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டப் பின்னரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த மருத்துவமனையில் போதுமான சிச்சை வசதிகள் இல்லாத நிலையில் மருத்துவர்கள் உரிய கவனம் செலுத்தி மாணவரை முன்னரே வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்திருக்க வேண்டும். மருத்துவமனையின், அரசின் அலட்சியமே உயிரைக் காப்பாற்ற முடியாததற்கு முக்கிய காரணம் என சரமாரியாகக் குற்றம் சாட்டினர்.
சகாயராணி விக்டோரியா மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து காரைக்கால் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.