அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. மேலும் 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 7-ந்தேதி விசாரணைக்கு வந்த போது டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் வீசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதோடு இந்த வழக்கின் விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது உள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில்லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.