சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஆம்னி பஸ்சின் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் நடைபெறும் உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல ஒரு ஆம்னி பஸ்சில் டிக்கெட் எடுத்து இருந்தனர்.
அந்த பஸ் சேலத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நள்ளிரவு 12.45 மணி அளவில் அந்த பஸ் பெத்தநாயக்கன்பாளையம் வந்தது. அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி பஸ்சின் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.