
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமாகி உள்ள நிலையில் அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் அவரது நண்பர் இளங்கோவனை கைது செய்யும் பணியில், அரசு களம் இறங்கிஉள்ளதாக கூறப்படுகிறது.இப்படியொரு நிகழ்வு நடந்தால், அரசியல் ரீதியில் அது தனக்கு சாதகமாக இருக்கும் என்பதால், பழனிசாமியும் கைதுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார். என அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017 ஏப்., 23 நள்ளிரவு, 11 பேர் அடங்கிய கொள்ளை கும்பல், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்தனர்.காவலாளி ஓம்பகதுார் தடுக்க, கொள்ளை கும்பல் கட்டிப் போட்டு அடித்ததில், அவர் இறந்தார். அதன்பின், அந்த கும்பல் கொள்ளை அடித்துதப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில் வாளையாறு மனோஜ், சயான் உள்ளிட்ட கேரளாவை சேர்ந்த, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை, கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட சேலம், ஆத்துாரை சேர்ந்த கனகராஜ் என்பவர், மர்மமான முறையில் விபத்தில் இறந்தார். அவர், ஏற்கனவே ஜெயலலிதாவிடம் டிரைவராகபணியாற்றியவர். இதேபோல சயான், கேரளாவுக்கு மனைவி, மகளுடன் திரும்பிய போது, அவர்கள் சென்ற கார் விபத்துக்குஉள்ளானது. அதில், சயானின் மனைவி மற்றும் மகள் இறந்தனர். இந்த விபத்தும் மர்மமான முறையில் நடந்ததால், இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என, சந்தேகம் ஏற்பட்டது.
அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க., தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், வழக்கை தீவிரமாக விசாரித்து, உரியவர்களுக்கு தண்டனை அளித்து, சிறைக்கு அனுப்புவோம் என்று உறுதி அளித்தது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும், விசாரணையை தீவிரப்படுத்தவில்லை என, அரசுக்கு பல முனைகளில் இருந்தும் நெருக்கடி வர துவங்கியது. இதையடுத்து, ஆகஸ்டில் மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கனகராஜ் குடும்பத்தினர் உள்ளிட்ட, 316 பேரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை அவசர அவசரமாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், எப்படியாவது பழனிசாமியையும், அவரது நண்பரும், சேலம் புறநகர் அ.தி.மு.க., மாவட்ட செயலருமான இளங்கோவனையும் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான், தி.மு.க.,வின் திட்டம். இந்த விவகாரத்தில், விசாரணை வாயிலாக இருவரும் நேரடியாக சிக்குவர் என்று தான் அரசு நினைத்தது. ஆனால், விசாரணையில் வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இருக்கும் ஆதாரங்களை வைத்து இருவரையும் கைது செய்யுங்கள்’ என, போலீசாருக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி கொடுத்தனர். ஆனால், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் முதல் நீலகிரி மாவட்ட எஸ்.பி., வரை, ஆதாரமின்றி பழனிசாமியை கைது செய்ய மறுத்து விட்டனர்.
இதனால் கோபம் அடைந்த ஆட்சி மேலிடம், வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உள்ளது. அதன் ஒரு கட்டமாக தான், வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்த தேன்மொழியை, சி.பி.சி.ஐ.டி.,யின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி.,யாக கொண்டு வந்துள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என, தேன்மொழிக்கு ‘அசென்மென்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வேகமாக விசாரணையை துவக்கி உள்ளனர். தீபாவளிக்கு பின், எந்த நேரத்திலும் பழனிசாமியும், இளங்கோவனும் கைது செய்யப்படலாம். அ.தி.மு.க.,வில்இருப்பது போல காட்டி கொண்டிருக்கும் தலைவர் ஒருவர் தான், இந்த விவகாரத்தில், அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.





