திமுக., குடும்பக் கட்சிதான்: கருணாநிதி பாணியில் ஸ்டாலின் ஒப்புதல்!

சற்றுமுன் தமிழகம்

சென்னை:
தமிழக அரசியலில் காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக., தலைவர் கருணாநிதி பாணியில் திமுக., ஒரு குடும்பக் கட்சிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, அதற்கு விளக்கம் கொடுத்தார்.

புதன்கிழமை நாளை நடிகர் கமல் ஹாசன் அரசியல் பயணம் துவங்குகிறார். இதற்காக அவர் அழைப்பிதழை கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் தேடி வந்து அளித்து, மு.க.ஸ்டாலினையும் சந்தித்துச் சென்றார்.

இந்த நிலையில். தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதார பயிரை பாதுகாக்கும் வேலியாக கோடிக்கணக்கான தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன். பருவநிலை மாறும் போது சில பூக்கள் திடீரென மலரும். சில உதிரும்.

பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடும் கட்சிதான் திமுக. குடும்பக் கட்சி என்று சொல்லக் காரணம், பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.

அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக்கடிப் புயலும் மாறி மாறி வந்து போகும். அறிவாலயம் என்னும் பெயருக்கு ஏற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர்.

எளியவர்களாக இருந்தாலும், கறுப்பு – சிவப்பு வேட்டி அணிவதில் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாவட்ட வாரியாக நடக்கும் திமுகவினருடனான சந்திப்பு புதிய அனுபவமாக உள்ளது. திமுக வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்

– என்று அறிவாலயக் கோயிலின் பக்தர்களான தொண்டர்களுக்கு, குடும்பக் கட்சி திமுக., என்று சொல்வதன் பொருளை விளக்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.