
புது தில்லி: மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு நம் நாடு சுதந்திரம் பெற முக்கியக் காரண கர்த்தராக விளங்கியவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால் நாடு சுதந்திரம் அடையும் போது தேசப் பிரிவினையை ஆமோதித்தார் என்றும், நாட்டில் ஹிந்துக்கள் பெருமளவில் இஸ்லாமியர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட போது ஹிந்துக்களை சகித்துக் கொள்ளச் சொன்னார் என்றும் கூறி, 1948 ஜன.30ல் காந்தியை தீவிர ஹிந்து மதப் பற்றாளரான நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 1949ல் அவர்களுக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. மேலும், இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காந்தியின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கைக்கும், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கிற்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த பங்கஜ் பட்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ‘காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பதுடன் கோட்சே, ஆப்தே தவிர வேறு எவரேனும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளனரா என தீர விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, ஓர் ஆய்வுக் கட்டுரை அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



