
சென்னை-புறநகர் பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை இன்றும் மழை .மழை மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில்பல இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. 7 மணி அளவில் தூறிக் கொண்டிருந்த மழை இரவு 10 மணிக்கு பிறகு பலத்த மழையாக மாறியது. சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் இரவில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், சைதாப்பேட்டை, வேப்பேரி, பூக்கடை, புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், மதுரவாயல், போரூர், கே.கே.நகர், கிண்டி உள்ளிட்ட சென்னையின் அனைத்து பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய மழை பெய்தது.
இரவில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கினாலும் சில இடங்களில் மழைநீர் உடனடியாக வடிந்தது. ஆனால் சென்னையில் சில இடங்களில் இன்றும் வெள்ளம் வடியாமல் தேங்கி கிடந்தது.
இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளானார்கள். சென்னை புளியந்தோப்பில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. புளியந்தோப்பு டிமெல்லர்ஸ் சாலையில் கே.பி. பூங்கா அருகே இன்று காலையிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கிடந்தது. இதனால் இன்று அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புளியந்தோப்பு, பெரம்பூர், அயனாவரம், சென்ட்ரல், பாரிமுனை, வேப்பேரி போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் இந்த சாலையையே பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இன்று காலையில் தண்ணீர் சற்று வடியத் தொடங்கியது. அங்கு மோட்டார் பம்பு மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. பட்டாளம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்பட்டது.
இதனால் இந்த வழியாக சென்ற வாகனங்கள் பழுதானது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றனர். ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு நேற்று இரவு பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீர் உடனே அகற்றப்பட்டது. ராயப்பேட்டை ஜி.பி. சாலையிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை பகுதியிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.
ராயபுரம் ராஜகோபால் தெரு, லோட்டஸ் ராமசாமி தெரு, புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர், திருவள்ளூர் குடியிருப்பு, இளையதெரு ஆகிய இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். பழைய வண்ணாரப்பேட்டை சி.பி.சாலை ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வ.உ.சி.நகர் 28-வது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கீழ் தளத்தில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் இருக்கும் மழைநீரை வாளிகள் மூலம் பொதுமக்கள் எடுத்து வெளியே ஊற்றி வருகின்றனர். அதேபோல் பெரம்பூர் சுரங்கப்பாதையிலும் இன்று தண்ணீர் தேங்கி காணப்பட்டது. வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலத்தில் நேற்று இரவு மழை பெய்தபோது தண்ணீர் தேங்கியது. இன்று காலையில் வடிந்தது. சென்னை மந்தவெளி சி.ஐ.டி. காவலர் குடியிருப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மோட்டார் பம்பு மூலம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் மழைநீர் வடிகால்வாய் வழியாக அப்புறப்படுத்தப்படுகிறது. திருவொற்றியூர் மேற்கு பகுதி ஆதிதிராவிடர் காலனியில் மழை வெள்ளம் இடுப்பு அளவு தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். திருவொற்றியூர் ராஜா சண்முகபுரம், ராஜா சண்முகம் நகர் பகுதிகளில் மழைநீர் நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனுக்குடன் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படுகிறது. எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மணலியில் கண்ணபிரான் தெரு, வேலு தெருக்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. சென்னையில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்துவதற்காக மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்குவது பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனுக்குடன் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மழை காரணமாக மரம் விழுந்தாலும், கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டாலும், மின்வெட்டு, மின் கசிவு ஏற்பட்டாலும் அதை சரி செய்யவும், சீரமைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் இன்றும் தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்தது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் இன்று காலை 8 மணி அளவில் மழை பெய்தது. இதேபோல் மீனம்பாக்கம், ஆலந்தூர், போரூர், நந்தம்பாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் ஆகிய இடங்களிலும் இன்று காலையில் மீண்டும் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை செங்குன்றத்தில் 12.7 செ.மீ, நுங்கப்பாக்கத்தில் 7 செ.மீ, மீனம்பாக்கத்தில் 3 செ.மீ, நாகர்கோவிலில் 2 செ.மீ மழை பெய்துள்ளது. 4 நாட்கள் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். சென்னை வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறைகளின் அதிகாரிகளும் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பருவமழைக் காலங்களில் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க 10 இணைப்புகளுடன் கூடிய 1913 உதவி எண்ணும், 044-2561 9206, 25619207, 25619208 ஆகிய தொலைபேசி எண்களும், 9445477205 என்ற வாட்ஸ்-அப் செயலியும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை இந்தக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள திரையின் மூலம் கண்காணிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு அறையை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தற்போது 10 இணைப்புகளுடன் செயல்பட்டு வரும் 1913 என்ற உதவி எண்ணில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கூடுதலாக 10 இணைப்புகளை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷூ மஹாஜன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.