
தொடா் மழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவுமுதல் மழை குறைந்த நிலையில், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.