
RSS ஊர்வலம் ஒத்திவைப்பு – கர்ம வீரர்களுக்கு தடைக் கற்களும் படிக்கற்கள் தான். இருப்பினும் பொய் பரப்புரைகளுக்கு நீதிமன்றம் செவி சாய்த்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்,

ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தின் பயணம் நீண்ட நெடிய 96 வருட பாரம்பரியமிக்கது. தாமாக முன்வந்து பிரதிபலன் பாராமல் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்வதே ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தம்.
இன்று உலகிலேயே மிகப்பெரிய தன்னார்வ சேவை அமைப்பான சேவா பாரதி பாரதி ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. வெள்ளம், புயல், நிலநடுக்கம், போர் முதலிய பேரிடர் சூழலில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் மக்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்வதை நாடறியும்.
இந்திய சீனப்போரின் போது மலைப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் செல்வதற்காக பாதைகளை சீரமைத்து கொடுத்தது. ராணுவ வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை போர்முனைக்கே கொண்டு சென்று ஒப்படைத்தது RSS.காயம் பட்ட வீரர்களுக்கு முதலுதவி செய்வது. மேலும் சீனப் போரின் போது தலைநகர் டெல்லியில் போக்குவரத்து சீர் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது போன்ற சீரிய பணிகளால் ஈர்க்கப்பட்ட நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தையும் இடம்பெறச் செய்தார். குடியரசு தின அணிவகுப்பில் ஆர் எஸ் எஸ் பேரியக்கம் தவிர வேறு எந்த அரசு சாரா அமைப்பும் ஊர்வலத்தில் பங்கேற்றதில்லை என்பது வரலாறு.
இப்படி நீண்ட நெடிய வரலாறு உடைய இயக்கத்தின் ஊர்வலத்தை தடை செய்து நான்கு சுவற்றுக்குள் நடத்திக் கொள்ள வேண்டுமென நிர்பந்திப்பது வேதனையிலும் வேதனை.
ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கிய இயக்கம்.தற்போதுகூட பல மாநிலங்களில் முதல்வராக இருப்பவர்கள் RSS ஐ சார்ந்தவர்களே. நமது நாட்டின் பிரதமரும், முன்னாள் குடியரசுத் தலைவரும், முன்னாள் துணை குடியரசுத் தலைவரும் ஆர்எஸ்எஸ் ல் பயிற்சி பெற்றவர்களே ஆவர்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் பிரிவினைவாதிகளும், நக்சலைட்டுக்களும் RSS பேரியக்கம் ஏதோ ஒரு மதவாத இயக்கம் போலவும், சமூக விரோத சக்தி போலவும் பரப்பும் பொய் பிரச்சாரத்தினை நீதிமன்றமும் நம்பி விட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது.
தமிழக உளவுத்துறை அறிக்கையில் கூட ஆர்எஸ்எஸ்-ஆல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்ற குறிப்பிடவில்லை. பாதுகாப்பு பிரச்சனை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது கட்டாயம். அடிப்படை உரிமை. இவ்வாறான நிலையில் சுற்றுச் சுவர் உள்ள வளாகத்திற்குள் பேரணியை நடத்தலாம் என்றும் அரங்கக் கூட்ட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லியிருப்பது பொய்யான பரப்புரையாளர்களுக்கு தீனியாகிப் போனது .
நேற்று கடலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அக்கம் பக்கம் திரும்பி இருப்பார்களா? கோசம் எழுப்பினார்களா? ஆரவாரம் செய்தார்களா? அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை கடந்து கூட்டம் நடத்தினார்களா? நீதிமன்றம் கவனிக்க வேண்டும்..
ஆர் எஸ் எஸ் மற்ற இயக்கங்களைப் போன்று பல பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. வருடத்திற்கு ஒருமுறை விஜயதசமியை ஒட்டி மட்டுமே அணிவகுப்பு ஊர்வலத்தை இதுவரையில் தமிழகத்தில் நடத்தி வந்தது. ஏதேனும் ஒரு இடத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் சிறு அசம்பாவிதம் நடந்துள்ளதா? பிறரை காயப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்களா? கோஷம் எழுப்பி உள்ளனரா எதற்காக இத்தனை தடை?
இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்தில் கூட ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடை செய்ததில்லை.
ஆகவே நீதிமன்றம் பிரிவினைவாதிகளின் பொய் கருத்துக்களுக்கு செவி சாயதுவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது.
சிலர் இந்த ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆரவாரம் செய்யலாம். துள்ளிக் குத்திக்கலாம். ஆனால் இவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். கர்ம வீரர்களுக்கு தடைக்கற்களும் படிக்கற்களே. ,சட்டத்தின் வாயிலாகவே இந்த தர்மப் போரை RSS பேரியக்கம் வென்றெடுக்கும்… என்று தெரிவித்திருக்கிறார்.