மயிலாடுதுறை சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு அதிக மழை..

Published:

images 55 1 - 2026

மயிலாடுதுறை சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது அதிக மழை பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

1790804 balachandran - 2026

அதிகபட்சமாக சீர்காழியில் சுமார் 44 செமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து மேற்கு திசையில் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லும்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதி கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செமீ மழை பதிவாகி உள்ளது. சீர்காழியை பொருத்தவரை இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழையாகும். இந்த அளவுக்கு அதிகப்படியான மழை பெய்ததற்கு மேகவெடிப்பு காரணமில்லை. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் பரவலாகவும், 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சென்னை முதல் கடலூர் வரை வட கடலோர மாவட்டங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு வடதமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் மிதமான மழைக்கும், சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. 16ம் தேதியை ஒட்டி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20 அடியை தாண்டியுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img