ஆதீன மடங்கள் அனைத்தும் திமுகவின் அறிவாலய சொத்து என நினைக்கிறார்களோ? என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதின மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளர்த்ததிலும் தமிழ்ப் பண்பாடான ஆன்மீகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியது.
தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுதையும் எடுத்துக் கொள்ளும் தமிழக அரசு, கோவில்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் நலன்களில் துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோவில்களை சீரமைப்பதில்லை, பராமரிப்பதில்லை எண்ணெய் விளக்குகள் கூட ஏற்ற முடியாத பல்லாயிரம் கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. அந்த கோவில்கள் மீதெல்லாம் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டும் அறமில்லாத துறை ஆதீன மடங்களின் மீது தன் பார்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?
ஆதீன மடங்களின் பாரம்பரியத்தையும் பழக்க வழக்கங்களையும் சீர்குலைப்பதற்காகவா?
காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233 வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியார் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சரின் உறவினர் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கோடு திருச்சிற்றம்பல ஞான தேசிக பிரமாச்சாரியார் சுவாமிகளுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்த சூழலில் உடல் நலத்தை காரணங்காட்டி ஆதீனம் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கோவில் சொத்துக்கள் கொள்ளை போன போதும், ஆகமங்கள் மீறப்பட்ட போதும், கோவில்களே காணாமல் போன போதும் அமைதியாய் வேடிக்கை பார்த்த அறநிலையத்துறை, ஆதீனம் பதவி விலகி விட்டார் என காரணம் காட்டி காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு வேக வேகமாக செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கோயில்களை எல்லாம் காட்சி பொருளாக, வணிக நிறுவனமாக மாற்றியது போதாதா? ஆதீன மடங்களையும் கார்ப்பரேட் கம்பெனியாக மாற்ற அறநிலையத்துறைக்கு ஆசையோ? எனவே உடனடியாக தொண்டை மண்டல ஆதினம் மடத்திலிருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் .
அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அமைச்சரின் உறவினர்களை அடக்கி வைக்க வேண்டும். ஆதின மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துக்கள் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட்டால் திராவிட மாடல் விடியல் அரசுக்கு நல்லது. இல்லையென்றால் வரும் தேர்தலில் இந்துக்கள் பாடம் புகற்றுவர்.
தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அறநிலை துறையின் ஆக்கிரமிக்கும் எண்ணத்தை கைவிட சொல்ல வேண்டும்.மடாதிபதிகள் மனம் வருந்துவது அரசுக்கு நல்லதல்ல. சிலப்பதிகார கூற்றுப்படி ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதைமறந்திட வேண்டாம்.