திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோவிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் ஒன்றாக வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற கோவிலான பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும். அனைத்து சிவன் ஆலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கார்த்திகை தீபம் கொண்டாப்படும்.
மக்கள் வீடுகளிலும் இனிப்புகள் வைத்து பூஜை செய்து, வீடுகள் முழுவதும் தீபம் ஏற்றி, வாழ்வின் இருள் நீங்கி ஒளி வீச கடவுளை வழிபடுவர்.
கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக எளிய முறையில் தீபத் திருவிழா நடத்தப்பட்டது. நிகழாண்டு தீபத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்து வருகிறது.
காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நிறைவு பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவ.27) தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னா், விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி கோயில் தங்கக் கொடிமரம் அருகே அருள்பாலித்தனர்.
அருணாசலேஸ்வரா் சன்னதி எதிரே உள்ள தங்கக் கொடி மரத்தில், சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபத் திருவிழாவுக்கான ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது இதன்பிறகு தினமும் காலை, இரவு வேளைகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.
டிசம்பா் 3-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.